பூமிப் பந்தின் மையப்பகுதி (core) இன்னும் சூடாகவும், கொதிக்கும் குழம்பாகவும்தான் உள்ளது. இந்த மையப்பகுதிக்கு மேலாக mantle எனப்படும் பகுதி உள்ளது. அதற்கும் மேலாக crust எனப்படும் மேலோடு உள்ளது. ஆமையில் முதுகில் உள்ள ஓடு மாதிரி இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்களேன்!
இந்த மேலோடு நல்ல விளாம்பழத்தின் ஓடு மாதிரி மொழுமொழு என்று ஸ்மூத் ஆக இருக்காது. சில இடங்களில் பிளந்து, விண்டுபோன ஓடுகளாக இருக்கும். அங்குதான் பிரச்னையே ஆரம்பமாகிறது.
மேலே உள்ள படத்தில் கறுப்புக் கோடுகள் காணப்படும் இடங்களில்தான் இரண்டு பிளேட்கள் அல்லது ஓட்டாஞ்சில்லுகள் ஒன்றை ஒன்று மோதி உரசுகின்றன. தினம் தினம் இவை நங் நங் என்று மோதிக்கொள்ளா. ஆனால் பலவேறு காரணங்களால் இந்த ஓட்டாஞ்சில்லுகள் ஒன்றை ஒன்றை நசுக்கித் தள்ள முயற்சி செய்யும். அடிப்பகுதியில் பீறிட்டு எழ முயற்சி செய்யும் கொதிக்கும் குழம்பு ஒரு காரணம். இதன் விளைவாக அந்த கறுப்புக் கோட்டுப் பகுதிகளில் எப்போதும் அழுத்தம் அதிகமாக இருக்கும்.
அதை நீங்கள் கவனித்தால், ஒரு கோடு அந்தமான், இந்தோனேசியா பக்கமாகப் போகும். அதே கோடு ஜப்பானை உரசிக்கொண்டு போவதையும் பார்க்கலாம். இதே கோடுதான் பங்களாதேசம் வழியாக இமயமலை மேலே ஏறி மீண்டும் குஜராத் வழியாக அரபுக் கடலில் இறங்குவதைப் பார்க்கலாம். இதனால்தான் இந்தப் பகுதிகள் சீஸ்மிக் இயக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகள் எனப்படும். கடந்த இருபது ஆண்டுகளில் குஜராத், மஹாராஷ்டிரா பகுதிகளில் நடந்துள்ள நில நடுக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 2004-ல் இந்தோனேசியா, அந்தமான் நிலநடுக்கமும் அதனால் ஏற்பட்ட சுனாமியும் உங்களுக்கு நன்றாகவே நினைவில் இருக்கும்.
நில நடுக்கம் என்பது எப்படி ஏற்படுகிறது? இரண்டு சில்லுகள் ஒன்றுக்கு ஒன்று பக்கவாட்டில் காகிதம் கிழிவதுபோல நகரலாம். அல்லது, ஒன்று ஒன்றைக் கீழே அழுத்திவிட்டு மேலே போகலாம்.
இந்தக் கிழிசல் அல்லது நகர்தல் நடக்கும் பகுதி எபிசெண்டர் (நடுக்க மையம்) எனப்படும். இந்த நடுக்க மையம் பூமியின் மேல்பரப்புக்கு வெகு அருகில் இருந்தால், அதிர்ச்சி பலமானதாக இருக்கும். ஆழத்தில் இருந்தால், அதிர்ச்சி அவ்வளவாக இருக்காது. நடுக்க மையம் கடலுக்கு அடியில் இருந்து, அதனால் ஒரு சில்லு இன்னொரு சில்லை அழுத்திவிட்டு மேலே எழுந்தால் நிகழ்வதுதான் சுனாமி. பல கிலோமீட்டர் நீளத்துக்கு, ஒரு சில்லு ஒரு மீட்டர் உயரத்துக்கு எழுகிறது என்றால், எந்த அளவுக்கு கடல் நீரை நகர்த்தும் என்று பாருங்கள். அத்தனை கடல் நீரும் உயர எழும்பி கரையை நோக்கிப் பாயும்போதுதான் ஆழிப் பேரலை என்ற நிகழ்வு நடைபெறும்.
நிலம் அதிரும்போது அதன் அதிர்ச்சியைக் கணக்கிட ரிக்டர் அளவுகோல் என்பதைப் பயன்படுத்துவார்கள். நிலம் அதிரும் என்று நாம் சொல்லும்போதே ஒருவித அலைகள் பரவுவதாக நம் சொல்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும். இரண்டு சில்லுகள் ஒன்றோடு ஒன்று மோதினால், மோதிய வேகத்தில் இரண்டும் எதிர்த் திசையில் பின்வாங்கும். பின் இரண்டும் மீண்டும் ஒன்றை ஒன்று நெருங்கு மோதும். இப்படி மோதிக்கொண்டே இருக்கும் இரு சில்லுகளும் கொஞ்சம் கொஞ்சமாக மோதல் வீச்சில் குறைந்து (amplitude attenuation) அமைதியாகும். அப்படி அவை மீண்டும் மீண்டும் மோதும்போது நில அதிர்வலைகள் உருவாகும் அல்லவா? அவற்றை நுட்பமான கருவிகள் கொண்டு அளக்கலாம். அந்தக் கருவியில் பதிவாகும் அதிர்வலைகளின் வீச்சைக் கொண்டு, நில நடுக்கம் எவ்வளவு மோசமானது என்று தெரிந்துகொள்ளலாம்.
இந்த ரிக்டர் அளவு என்பது லாகரிதமிக் அளவுகோலில் வருவது. அதாவது ரிக்டர் அளவு 6 என்பது ரிக்டர் அளவு 5-ஐப்போல பத்து மடங்கு பெரியது. ரிக்டர் அளவு 7 என்பது ரிக்டர் அளவு 6-ஐப்போல பத்து மடங்கு பெரியது; 5-ஐப்போல 100 மடங்கு பெரியது. மாபெரும் சுனாமி 2004 நேரத்தில் நடந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 9-ஐத் தாண்டியது. எனவே மிகக் கோரமானது. திங்கள் அன்று நடந்த நிலநடுக்கம் சுமார் 6.5 என்ற ரிக்டர் அளவு. அதாவது 2004 நில நடுக்கத்தைப் போல சுமாராக ஆயிரத்தில் ஒரு பங்குதான். எனவேதான் உயிர்ச்சேதம், பொருள் சேதம் இன்றித் தப்பித்துள்ளோம்.
நிலநடுக்கம் என்பதைத் தடுக்கமுடியாது. எப்போது வரும் என்பதைக் கணிப்பதும் கடினம். நாம் நிலநடுக்கப் பகுதியில் எங்கு இருக்கிறோம் என்பதைப் பொருத்து, சரியான கட்டுமானங்களைக் கட்டி, சுனாமியிலிருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்துகொள்ளவேண்டும். அவ்வளவுதான் மனிதனால் செய்யமுடிந்தது.
Reade more >>